×

புற்றீசல் போல முளைக்கும் புரோட்டீன் கடைகள்: இளைய தலைமுறையை எச்சரிக்கும் மருத்துவர்கள்

சிறப்பு செய்தி ‘உணவே மருந்து’ என்ற காலகட்டம் மாறி, தற்போது உடலுக்கு தேவைப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் தனியாக சப்ளிமென்ட்ரி எனப்படும் கூடுதல் உணவாக எடுத்துக் கொள்ளும் கலாச்சாரத்திற்கு இளைய தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர். புரோட்டீன், வைட்டமின் உள்ளிட்ட குறைபாடுகளை களைய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், தற்பொழுது காலம் மாறி காய்கறிகளுக்கு பதிலாக அந்த புரோட்டீனையே உணவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.

கடந்த சில வருடங்களாகவே வே புரோட்டீன் (whey protein) எனப்படும் ஒருவித சத்து பவுடர் இளைஞர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. பால் மற்றும் நட்ஸ் உள்ளிட்டவற்றை நன்கு கொதிக்க வைத்து அதனுடன் சில சத்துக்களை சேர்த்து இது தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதை யாரும் அறிய மாட்டார்கள். ஏனென்றால், இந்த வே புரோட்டீன் எனப்படும் ஊட்டச்சத்து பவுடரின் விலை மிக அதிகம். இதில் நிறைய கம்பெனிகள், நிறைய பிராண்டுகள் வருகின்றன. அவற்றில் நல்ல கம்பெனி பிராண்ட் என்று பார்த்தால் ஒரு கிலோ எடை கொண்ட வே புரோட்டீன் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுவே சந்தையில் கிடைக்கும் சாதாரண புரோட்டீன் சத்து பவுடர் என்றால் 1500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

புரதம் அதிகம் உள்ள ஊட்டச்சத்து பானமாக இது பார்க்கப்படுகிறது. புரதம் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் வளர்ச்சியடைய, நோயிலிருந்து குணமடைய செல்கள் வளர புரதம் அவசியம். எனவே புரதச் சத்தை அளிப்பதற்காக வே புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு துணை உணவு என்று கூறலாம். தசைகளில் புரத சத்தை மேம்படுத்துவதற்கும் மெலிந்த தசையை வலுவாக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களும், வீட்டில் உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி வைத்து உடற்பயிற்சி செய்பவர்களும் இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஒரு பொருளை பயன்படுத்தும்போது அதனை ஏன் பயன்படுத்துகிறோம், அந்த உணவுப் பொருளில் என்ன கலந்துள்ளது, உணவுப் பொருள் அடைத்து வைக்கப்பட்டுள்ள டப்பாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தான் உணவு தயார் செய்யப்படுகிறதா என்பதை பெரும்பாலும் கவனிப்பது கிடையாது.

மலிவான விளம்பரங்களை நம்பி பெரும்பாலும் இளைய தலைமுறையினர் அதிகமாக பொருட்களை வாங்குவதும், உணவுப் பொருட்களை உட்கொள்வதும் என்ற ரீதியில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் இதை சாப்பிட்டால் மூன்று மாதத்தில் 60 கிலோ எடை கூடலாம். 3 மாதத்தில் 30 கிலோ எடையை குறைக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி விலை மதிப்பில்லாத உடல் உறுப்புகளை சிதைத்துக்கொள்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வே புரோட்டீன் ஊட்டச்சத்து பவுடர் விற்பனையில் சில குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று எண்ணில் அடங்கா கம்பெனிகள் வந்துவிட்டன. ஒவ்வொரு தெருவிலும் மளிகை கடை, மெடிக்கல் ஷாப், காய்கறி கடை போன்று தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்களில் வே புரோட்டீன் கடைகளும் முளைக்க தொடங்கிவிட்டன. ஒரு நாளைக்கு 2 ஸ்கூப் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு அவர்கள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். ஆனால் கடைகளில் 2 கிலோ பேக், 5 கிலோ பேக் என சிறிய அளவிலான அரிசி மூட்டைகள் போன்று கட்டி தொங்க விடுகின்றனர்.

இதன் மூலம் வே புரோட்டீன் எனப்படும் பொருளை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்ற ஒரு மாயையை இளைஞர்கள் மத்தியில் விளம்பரம் மூலம் ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில், நல்லதை பொறுமையாக எடுத்துக் கொண்டு தீயதை உடனடியாக எடுத்துக் கொள்ளும் தற்போதைய இளைய தலைமுறையினரும் மாய வலையில் விழுந்து விடுகின்றனர். இதனால் சிறு வயதிலேயே கிட்னி பிரச்னை, இதய கோளாறு, வயிறு தொடர்பான பிரச்னைகளில் சிக்கி, இதனால்தான் வந்தது என தெரியாமலேயே அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக, தினமும் நாம் காபி, டீ குடிப்போம். ஏதாவது உடல் உபாதைகள் ஏற்பட்டால் அன்று என்ன சாப்பிட்டோம் அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருக்குமா என்பது நமது நினைவுக்கு வரும். ஆனால் காலையில் தினமும் குடிக்கும் காபி, டீ நமது நினைவுக்கு வராது. அதுபோன்று 20 முதல் 25 வயது வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் கூடுதலாக தரமற்ற வே புரோட்டீன் எனப்படும் இணை உணவுகளை எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு 30 முதல் 35 வயதை கடக்கும் போது பிரச்னை ஏற்படும் என்று கூறினால் அவர்களால் அதை நம்ப முடியுமா, கண்டிப்பாக பிரச்னை உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது புற்றீசல் போல முளைக்க தொடங்கி இருக்கும் இந்த வே புரோட்டீன் இணை உணவு விஷயத்தில் இளைஞர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால், குறிப்பிட்ட வயதில் கட்டுமஸ்தான உடம்புடன் அழகைப் பெற்றாலும் பிற்காலத்தில் அதற்காக மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

* வரையறை தெரிந்து பயன்படுத்த வேண்டும்

கொரட்டூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரூபினி தேவி கூறியதாவது: வே புரோட்டீன் எடுக்கும்போது உடற்பயிற்சிகள் அதிக அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் ஆகும். கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் அது பலபக்க விளைவுகளை ஏற்படுத்தும். தண்ணீர் அதிகமாக குடிக்காவிட்டால் கிட்னியில் கற்கள் ஏற்படும். மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு கால் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும். எனவே உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமே வே புரோட்டீனை எவ்வளவு எடுக்க ேவண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தவேண்டும்.

காலை, மதியம், இரவு என எவ்வளவு உங்களது உணவில் புரோட்டீன் சேர்த்துக் கொள்கிறீர்களோ அதற்கு ஏற்ப வே புரோட்டீன் அளவை மாற்றி அமைக்க வேண்டும். இதுபற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். எந்த பிராண்ட் வே புரோட்டீன்களை வாங்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஜிம்முக்கு வரும் இளைஞர்களுக்கு பலர் பிராண்ட் இல்லாத வே புரோட்டீன்களை சிபாரிசு செய்கின்றனர். இது தவறு. ஒவ்வொருவரின் உடல் சார்ந்த விஷயங்களை நன்கு தெரிந்து அடிஷனல் உணவான வே புரோட்டீன்களை எடுக்க வேண்டும். இதை பயன்படுத்துவது தவறு கிடையாது. அதன் வரையறைகளை நன்கு தெரிந்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

* தவிர்ப்பது நல்லது

புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறியதாவது: வே புரோட்டீன் எனப்படும் இணை உணவு பொருள் உடலுக்கு மிகவும் கெட்டது. இந்த வே புரோட்டீன் எனப்படும் பவுடர் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது இன்றளவுக்கும் பலருக்கு தெரியாது. பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று சிலர் கூறுவார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. சோயா லெசித்தின் எனப்படும் பொருளிலிருந்து வே புரோட்டீன் எனும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நேரடியாக புரோட்டீனை தசைகளுக்கு செலுத்துவதால் பிரச்னை ஏற்படும். ஒரு சிலருக்கு வே புரோட்டீன் சாப்பிடுவதால் நன்றாக உடல் பெருத்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் இதை சாப்பிடுவதால் என்ன பிரச்னை என கேட்பார்கள். ஆனால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். 10 வருடம் கழித்து, 15 வருடம் கழித்து பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாரும் ஜிம்மிற்கு வந்து இதனால்தான் எனக்கு பிரச்னை ஏற்பட்டது என சொல்ல மாட்டார்கள். எனவே, இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இதேபோன்று 2 வருடங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தவர்களுக்கு வே புரோட்டீன் எனப்படும் ஊட்டச்சத்துடன் கிரியாட்டின் எனப்படும் ஒரு ஊட்டச்சத்து இணை உணவும் தரப்படுகிறது. இதுவும் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை இளைஞர்கள் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

* கண்டிப்பாக பக்கவிளைவுகள் உண்டு

பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் கூறியதாவது: எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதற்கு எப்.டி.ஏ எனப்படும் அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும். அப்போதுதான் சந்தையில் விற்க முடியும். வே புரோட்டீன் என்பது நல்ல புரோட்டீன் என்பதனை குறிக்கும். இதை எப்.டி.ஏ அனுமதியுடன் சில கம்பெனிகள் விற்கின்றன. திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கு இணை உணவுகளில் ஸ்டிராய்டு எனப்படும் பொருட்களும் கலந்திருப்பது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. நமது உடலில் எத்தனை கலோரிகளை நாம் செலவழிக்கிறோமோ அத்தனை கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும். இந்த வே புரோட்டீன் இணை உணவை தேவையில்லாமல் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக பக்க விளைவுகள் ஏற்படும். தேவையில்லாமல் எடுத்துக்கொள்வதால் லிவர், கிட்னி, இதயம் தொடர்பான பல பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, வே புரோட்டீன் அதிகமாக எடுத்துக் கொண்டால் இதய துடிப்பு அதிகரிக்கும். அப்போது, அதற்கு தேவையான ஆக்சிஜனை நமது உடலால் கொடுக்க முடியாது. இதனால் திடீர் மாரடைப்புகள் ஏற்பட்டு ஜிம்களில் பலர் உயிரிழப்பதை பார்த்திருப்போம். எனவே உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஜிம் டாக்டர்

சில ஜிம்களில் ஜிம் டாக்டர் என ஒருவரை நியமனம் செய்து வைத்துள்ளார்கள். இளைஞர்களுக்கு ஊட்டச்சத்து பானங்களை எவ்வளவு தர வேண்டும், எந்த ஊட்டச்சத்து பானங்களை தர வேண்டும் உள்ளிட்டவற்றை இவர் கவனித்துக் கொள்கிறார். ஒருவரின் உடலில் உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயம் சம்பந்தமான பிரச்னைகள் இவை எதையும் பற்றி அறியாமல் பணம் ஒன்றே குறிக்கோள் என பல ஜிம்களில் இதுபோன்ற சப்ளிமென்ட்ரி எனப்படும் வே புரோட்டீன் மற்றும் ஸ்டிராய்டு வழங்கப்படுவதால் அந்த காலகட்டத்தில் மட்டும் இளைஞர்கள் உடல்களை கட்டுமஸ்தானாக மாற்றி சென்று விடுகின்றனர். அதன் பிறகு வருங்காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து யாரும் கவலைப்படுவது இல்லை.

* கடைகள் ஏராளம்; நோய்கள் தாராளம்

தற்பொழுது ஒவ்வொரு ஜிம்மிலும் தனியாக வே புரோட்டீன் இணை உணவுக்கென ஒரு ரேக் அடித்து 5 கிலோ, 2 கிலோ, ஒரு கிலோ என பிரித்து வைத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது, முக்கிய வீதிகளில் பெரும்பாலும் செல்லப் பிராணிகளுக்கு உணவுகள் விற்கும் கடை போன்று வே புரோட்டீன்ஸ் கடைகளும் அதிகரித்துவிட்டன. அந்த அளவிற்கு இதை இளைஞர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவு கூட இல்லாத சிலர் உடலில் தெம்பு ஏற்படும் என்று நினைத்து இதுபோன்ற வே புரோட்டீன் எனப்படும் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால், சென்னையில் மட்டும் கடந்த 3 வருடங்களில் கணிசமாக வே புரோட்டீன் கடைகள் அதிகரித்துள்ளன. அதிலும் பிராண்ட் இல்லாத தரமற்ற வே புரோட்டீன் கடைகள் அதிகரித்து விட்டன.

* ஸ்டிராய்டு விபரீதம்

தற்போது சில ஜிம்களில் ஸ்டிராய்டு மருந்துகளும் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஸ்டிராய்டு என்பது நம் உடலில் உள்ள அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன். இந்த ஹார்மோன் உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் அளவை சீராக பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல உடலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைப்பதில் முக்கிய பணியாற்றுகிறது. எனவே ஜிம்முக்கு செல்லும் சில இளைஞர்கள் இதுபோன்ற ஸ்டிராய்டு மருந்து பொருட்களையும் எடுத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வைட்டமின் டேப்லெட் எனப்படும் மாத்திரைகளையும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வருங்காலங்களில் அவர்கள் பல பக்க விளைவுகளை சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புற்றீசல் போல முளைக்கும் புரோட்டீன் கடைகள்: இளைய தலைமுறையை எச்சரிக்கும் மருத்துவர்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு